கிழக்கு மாகாணத்தில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் 90 வீதமான பொதுச்சபை உறுப்பினர்கள் தமிழ் தேசியத்துடன் பயணித்து சிறீதரனுக்கே ஆதரவளிப்பர். தமிழ் தேசியத்திற்கெதிராக கருத்து தெரிவிக்கும் சுமந்திரன் கட்சிக்கு தலைவராக வந்தால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் இருந்து தமிழ் தேசியம் இல்லாது போய்விடும் - என்றார்.
யாழ் ஊடக அமையத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கு வடக்கு மாகாணத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் போட்டியிடப் போவதாக நான் அறிந்தேன். அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து யாராவது போட்டியிட வேண்டுமென நான் ஏனையவர்களிடம் கோரிக்கை விடுத்தேன். அப்பொழுது அவர்கள் என்னை போட்டியிடுமாறு வலியுறுத்தினார்கள். அதன்படியே நான் இந்த தலைவர் தெரிவுக்கு போட்டியிடுகிறேன்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு தலைவராகுவதற்கு கிழக்கு மாகாணத்திலும் தகுதியானவர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டுவதற்காகவே கட்சியின் தலைவர் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். எனது குடும்பம் தமிழரசு கட்சியின் பாரம்பரியத்தில் இருந்து வந்தது.
இந்த தலைவர் தெரிவில் போட்டியிடுகின்ற மூவருமே 2010 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மூலம் பாராளுமன்றுக்கு வந்தவர்கள். அந்த வகையில் சுமந்திரனை பொறுத்தவரையில் அவர் ஒரு சிறந்த சட்டத்தரணி. ஆனால் அவர் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருபவர்.
அவ்வாறு தமிழ் தேசியத்திற்கெதிராக கருத்து தெரிவிக்கும் ஒருவர் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு தலைவராக வந்தால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் இருந்து தமிழ் தேசியம் இல்லாது போய்விடும். இவ்வளவு காலமும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கொண்டிருந்த கொள்கைகள் கோட்பாடுகள் எல்லாம் அத்தோடு இல்லாமல் போய்விடும்.
அதேவேளை அடுத்ததாக போட்டியிடும் சிறீதரனை பார்க்கும் போது தமிழ்த் தேசிய கருத்துக்களையே தொடர்ந்து வலியுறுத்துகிறார். சிறீதரனுக்கு சர்வதேச நாடுகளிலும் செல்வாக்கு இருக்கின்றது. அவருடன் நான் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இதனை அவதானித்திருக்கிறேன்.
ஆகவே அவர் தமிழ் தேசியத்துடன் பயணிப்பவர் என்ற வகையில் இலங்கை தமிழ் அரசுக்
கட்சிக்கு தலைவராகுவதற்கு பொருத்தமுடையவர்.
அதேவேளை அவரிடம் ஒரு குணம் இருக்கின்றது. புத்திஜீவிகள், முக்கிய பிரதிநிதிகள், சர்வதேச நாட்டு பிரதிநிதிகளோ அவரிடம் தலைவர் தெரிவில் விட்டுக்கொடுங்கள். சுமந்திரன் இம்முறை வரட்டும் அடுத்த முறை நீங்கள் வாருங்கள் என கேட்டால் சிலவேளைகளில் சிறீதரன் விட்டுக் கொடுத்து விடக்கூடிய நிலை காணப்பட்டது.
சிறீதரன் விட்டுக்கொடுத்தால் நேரடியாக சுமந்திரன் தலைவராக தெரிவாகுவார். அதனை தவிர்ப்பதற்காகவே நான் குறித்த தலைவர் தெரிவில் போட்டியிடுகின்றேன்.
இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் சுமந்திரன் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டார். இதன்போது நான் ஆராய்ந்ததில் அவருக்கு தான் அதிக ஆதரவு நிலைமை காணப்பட்டது.
அப்பொழுது தீடீரென சிறீதரன் என்னை தொடர்பு கொண்டு கிழக்கு மாகாணத்துக்கு வருவதாக தெரிவித்தார். அப்பொழுது நான் அவரிடம் தெரிவித்தேன். நீங்கள் தலைவர் தெரிவில் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தால் நான் விட்டுத்தர தயாராக இருக்கின்றேன். ஏனென்றால் தமிழ்த் தேசியம் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றேன்.
அப்பொழுது சிறீதரன் "நான் போட்டியிடுவதில் இருந்து பின் வாங்கமாட்டேன்" என தெரிவித்தார்.
அப்பொழுது நான் சொன்னேன். தலைவர் தெரிவில் நான் தொடர்ந்து இருப்பேன். நீங்கள் விலகி விடுவீர்களோ என்ற சந்தேகம் உள்ளது என்றேன்.
நானும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அரியநேத்திரன், ஸ்ரீநேசன் ,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நடராஜா ஆகியோரும்
சிறீதரனுக்கு ஆதரவாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தீவிர பிரசாரம் செய்தோம்.
அந்த வகையில் மட்டக்களப்பைச் சேர்ந்த பொதுச்சபையின் 90 வீதமான உறுப்பினர்கள் சிறீதரனுக்கு ஆதரவளிக்க
முன்வந்தார்கள்.
அம்பாறை மாவட்டத்திலும் சுமந்திரனுக்கு ஆதரவான நிலைப்பாட்டே காணப்பட்டது. ஆனபோதும் நாங்கள் அங்கு போய் தமிழ் தேசியம் தொடர்பாக வலியுறுத்திய போது 85 வீதமானவர்கள் சிறீதரனுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார்கள்.
திருகோணமலையில் நான் அரச உத்தியோகத்தராக கடமையாற்றியவன் என்ற வகையில் திருகோணமலை பொதுச் சபை உறுப்பினர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டேன்.
அப்பொழுது அவர்கள் எனக்கு ஆதரவளிக்க முன்வந்தார்கள். ஆனாலும் நான் குறித்த விடயத்தை தெளிவுபடுத்திய நிலையில் 90 வீதமானவர்கள் தற்போது சிறீதரனுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார்கள்.
ஆகவே கிழக்கு மாகாணத்தில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் 90 வீதமான பொதுச்சபை உறுப்பினர்கள் தமிழ் தேசியத்துடன் பயணித்து சிறீதரனுக்கே ஆதரவளிப்பர். அதேபோல வடக்கு மாகாண பொதுச் சபை உறுப்பினர்களும் செயற்படுவார் என நம்புகிறேன்.
எதிர்வரும் 21ம் திகதி நடைபெறும் தலைவர் தெரிவுக்கான வாக்களிப்பில் நான் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கே எனது வாக்கை அளிப்பேன் எனவும் தெரிவித்தார்.
Post a Comment