நொண்டிச்சாட்டுக்களை சொல்லி தேர்தலை பிற்போட முடியாது - சுமந்திரன் சுட்டிக்காட்டு - Yarl Voice நொண்டிச்சாட்டுக்களை சொல்லி தேர்தலை பிற்போட முடியாது - சுமந்திரன் சுட்டிக்காட்டு - Yarl Voice

நொண்டிச்சாட்டுக்களை சொல்லி தேர்தலை பிற்போட முடியாது - சுமந்திரன் சுட்டிக்காட்டு


-எஸ்.நிதர்ஷன்-

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை நீதிமன்றம் இடைநிறுத்தியதால் தேர்தலை பிற்போட முடியாது. நொண்டிச் சாட்டுக்களை வைத்து தேர்தலை பிற்போடாது சட்டத்தின் பிரகாரம் தேர்தலை நடாத்த வேண்டும். அதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உள்ளது.

இவ்வாறு தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத் தரணியுமான பாராளுமன்ற உறுப்பினர் எம் .ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ் வர்த்தக சங்கத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..

பொலிஸ்மா அதிபருடைய நியமனம் சம்மந்தமாக உயர்நீதிமன்றத்திலே இடைக்கால உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபர் நுயமனம் தொடர்பாக 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு பல நாட்கள் விவாமிக்கப்பட்டு வந்த்து.

 இந்த வழக்கினை கொண்டு செல்வதற்கு அனுமதியினை வழங்குகின்ற அதே நேரத்தில் ஜனாதிபதியினாலே  நியமனம் பெற்ற பொலிஸ்மா அதிபருடைய நியமனம் சட்டபூர்வமானதாக இல்லை என்ற காரணத்தினாலே பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அந்த பதவியில் இருந்து இடைநிறுத்தி உச்ச நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு வந்த பிறகு அமைச்சரவை அவசர அவசரமாக கூடி கலந்துரையாடுகின்றார்கள் என்ற செய்தி எங்களுக்கு கிட்டியிருக்கின்றது. அந்த கலந்துரையாடலில் ஒரு நிரந்தர பொலிஸ் மா அதிபர் இல்லாத நிலையில் ஜனாதிபதி தேர்தல் நடாத்த முடியாது என்ற கருத்து நிலவுவதாக நாம் அறிகின்றோம். 

ஆனால் தேர்தல் நடாத்துவதற்கு சட்டத்திலே எந்தவித தடையும் கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக கூறுகின்றேன் . எங்களுடைய அரசியலமைப்பிலே எப்பொழுது ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பது மிக மிக தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

அதாவது செம்பரம்பர் 17 ஆம் திகதி முதல் ஒக்ரோபர் 17 ஆம் திகதிக்கும் இடையிலே ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடாத்தபட்டே ஆக வேண்டும். அவ்வாறு தேர்தலை நடாத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவின் கையிலே தான் கொடுக்கப்பட்டுள்ளது . 

ஆனாலும் ஜனாதிபதியின் கையிலே அது கிடையாது.  ஆகவே தேர்தல் ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் எந்தவித நொண்டி சாட்டுகளும் இல்லாமல் உடனடியாக தேர்தல் தினத்தினை அறிவித்து சட்டத்தின் பிரகாரம் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post