இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக அறியப்படும் தோனி ஒரு கட்டத்தில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக் மற்றும் கவுதம் கம்பீரை இந்திய அணியில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் இறங்கினார். 2012ஆம் ஆண்டு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் மூவரை குறித்தும் வெளிப்படையாக விமர்சித்து பேசியிருந்தார் தோனி.
அது அப்போது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. அதற்கு அடுத்த போட்டியில் சேவாக் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தோனிக்கு பதிலடி கொடுத்தார். இந்த சம்பவத்தால் கேப்டன் தோனி மீது பலரும் அதிருப்தி அடைந்தனர்.
2011 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. அடுத்து 2015 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கான திட்டத்தை கேப்டன் தோனி தயார் செய்தார். அதன்படி, மூத்த வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் 2015 உலகக் கோப்பை வரை விளையாடுவது கடினம் என்பதால் அவர்களை ஒருநாள் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற யோசனையை முன் வைத்தார் தோனி. மேலும், கவுதம் கம்பீர் ஃபீல்டிங்கில் மெதுவாக இருப்பதாகவும், சச்சின், சேவாக் ஆகியோரும் வயதின் காரணமாக ஃபீல்டிங்கில் சரியாக செயல்படுவதில்லை எனவும் அவர் அணி நிர்வாகத்திடம் கூறினார்.
ஆனால், அனுபவ வீரர்களான அவர்களை நீக்கினால் பல்வேறு விமர்சனங்களையும், ரசிகர்களின் எதிர்ப்பையும் சந்திக்க வேண்டி வரும் என்பதால் அவர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த முடிவு செய்தார் தோனி. 2015 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடந்த 2012 முத்தரப்பு ஒருநாள் தொடரில் அதிக இளம் வீரர்களை ஆட வைக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தார்.
அதனால் அந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர், சேவாக் மற்றும் கவுதம் கம்பீருக்கு சுழற்சி முறையிலேயே அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த முடிவு அப்போது கடும் விமர்சனத்தை கிளப்பியது. அந்த முத்தரப்புத் தொடருக்கு இடையே நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேப்டன் தோனியிடம் இது குறித்து கேட்டபோது அவர்கள் மூவரும் ஃபீல்டிங்கில் நிதானமாக செயல்படுவதாகவும், அதனால் எதிரணி வீரர்கள் அவர்கள் நிற்கும் திசையில் பந்தை அடித்து விட்டு ரன் எடுக்கிறார்கள் என கூறி இருந்தார்.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாக்கை மட்டம் தட்டுவது போல தோனி பேசி இருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்த போட்டியில் வீரேந்தர் சேவாக் டைவ் அடித்து ஒரு கேட்ச் பிடித்திருந்தார். அந்த போட்டிக்கு பின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வீரேந்தர் சேவாக், "நான் பிடித்த கேட்ச்சை பார்த்தீர்களா? அதன் பின்னும் தோனி எங்களை ஸ்லோ ஃபீல்டர்கள் என ஏன் கூறுகிறார் என எனக்கு தெரியவில்லை. அடுத்த உலகக் கோப்பையில் இளம் வீரர்கள் தான் விளையாடுவார்கள் என்பதால் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டி எங்களை சுழற்சி முறையில் பயன்படுத்த உள்ளதாக அவர் கூறினார். ஏன் இதை செய்கிறார்? என்பதை நீங்கள் தான் அவரிடம் கேட்க வேண்டும்." என்றார்.
அந்த முத்தரப்பு தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தது. 2015 உலகக் கோப்பைக்காகவே தோனி இந்த முயற்சிகளை செய்த நிலையில் அந்த உலகக் கோப்பையிலும் இந்திய அணி அரை இறுதியுடன் வெளியேறி இருந்தது. அதன் பின்னர் தோனியின் கேப்டன்சி மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் 2017 ஜனவரி மாதத்தில் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
Post a Comment