இலங்கை துணைத் தூதுவருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் விதித்த உத்தரவு - Yarl Voice இலங்கை துணைத் தூதுவருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் விதித்த உத்தரவு - Yarl Voice

இலங்கை துணைத் தூதுவருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் விதித்த உத்தரவு



ஆஸ்திரேலியாவுக்கான இலங்கையின் துணை தூதுவராகச் செயற்பட்ட ஹிமாலி அருணதிலகவின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றியவருக்கு 543,000  டொலர்கள் செலுத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலங்கை இராஜதந்திரி ஹிமாலி, ஆஸ்திரேலியாவின் ஊழியச் சட்டத்தை மீறியுள்ளார் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டிவந்த நிலையிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

கன்பராவிலுள்ள துணை தூதுவரின் இல்லத்தில் பணியாற்றுவதற்காக பிரியங்கா தனரத்ன என்ற பெண் வந்துள்ளார். 2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் குறித்த வீட்டில் அவர் பணிபுரிந்துள்ளார். 

மூன்று ஆண்டுகளாக வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றிய பிரியங்காவுக்கு அக்காலப்பகுதிக்கான ஊதியமாக 11, 212 டொலர்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.  

2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வாரமொன்றில் 36 மணிநேரப் பணிக்கான தேசிய மட்டத்திலான குறைந்தபட்ச ஊதியம் 656.90 டொலர்கள் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

அத்துடன், அனுமதிக்கப்பட்டதை விட அதிக நேரம் பணிக்கு அமர்த்தி, நிர்ணயிக்கப்பட்டதை விடவும் குறைந்தளவு ஊதியம் வழங்கி அஸ்திரேலியாவின் ஊழியச்சட்டத்தை தூதுவர் மீறியுள்ளார் எனவும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர். 

இந்நிலையில், ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தில் நியாயமான ஊழியச்சட்டத்தின்கீழ் ஹிமாலி அருணதிலகவுக்கு எதிராக பிரியங்கா தனரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் சார்பாக சட்டத்தரணி டேவிட் ஹிலார்ட் முன்னிலையானார்.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளை அடுத்து, ஹிமாலி அருணதிலகவினால் நியாய ஊழியச்சட்டம் பல்வேறு வழிகளில் மீறப்பட்டிருப்பதாகவும், எனவே அவர் செலுத்தவேண்டியிருக்கும் 374,000 டொலர் நிலுவைச் சம்பளத்துடன், வட்டியாக 169,000 டொலரைச் சேர்த்து மொத்தமாக 543,000 டொலர்களை பிரியங்கா தனரத்னவுக்குச் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

இலங்கை இராஜதந்திரி ஹிமாலி அருணதிலக்க, ஐ.நாவுக்கான இலங்கையில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக தற்போது பதவி வகிக்கின்றார்.
அதேவேளை, இவ்வழக்குடன் தொடர்புடைய வீட்டுப்பணிப்பெண் அவரது 3 வருட பணிக்காலத்தை முழுமையான நிறைவுசெய்திருந்த நிலையில், தொழில் வழங்குனர ஹிமாலி அருணதிலக ஆஸ்திரேலியாவிலிருந்து மீண்டும் இலங்கைக்கு வருவதற்குத் திட்டமிட்டிருந்த தினத்துக்கு முதல் நாள், தொழில் வழங்குனரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இரகசியமாக வெளியேறிவிட்டார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

வீட்டுப்பணிப்பெண்ணின் ஊதியமாக வெளிவிவகார அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்டிருந்த கொடுப்பனவு அவருக்கு முழுமையாக செலுத்தப்பட்டுவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post