இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள்? - Yarl Voice இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள்? - Yarl Voice

இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள்?



கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கொக்குதொடுவாய் மனித புதைகுழிக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (20)  இடம்பெற்றது. 

முல்லைத்தீவு  கொக்குதொடுவாய் பகுதியில்  கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வவு பணியானது மூன்று கட்டமாக இடம்பெற்று  52 மனித எச்சங்கள் அகழ்ந்தெடடுக்கப்பட்ட நிலையில் மூடப்பட்டுள்ளது. குறித்த அகழ்வு பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான  எவ்வித  உண்மைகளும் இதுவரை வெளிக்கொண்டுவரப்படவில்லை. எனவே  கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை  மூடி மறைக்க வேண்டாம், எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும் என கூறி குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது. 

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த  போராட்டத்தில்  பாராளுமன்ற  உறுப்பினர்  செல்வராசா கஜேந்திரன்,முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன்,வடக்கு மாவட்டங்களை சேர்ந்த முல்லைதீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்பாணம் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்து தமக்கான நீதி கோரி போராடியிருந்தனர். 

குறித்த போராட்டத்தில் கொக்குதொடுவாய் மனிதபுதைகுழியை சுற்றி கண்ணீர் விட்டு  கதறி அழுததோடு குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் உண்மையை  மௌனமாக்காதே: கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் சாட்சிகளை அச்சுறுத்தாதே ! ,கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி: ஸ்ரீ லங்கா  இராணுவமே  பொறுப்புக்கூற வேண்டும்! ,OMP ஒரு ஏமாற்று வேலை: காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னும்  நீதி இல்லை!, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இலங்கை இராணுவத்தின் பங்கை அம்பலப்படுத்துங்கள்!, வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது அன்புக்குரியவர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள்  ? உள்ளிட்ட பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி கடந்த  ஆண்டு 2023.06.29 ஆம் திகதி  இனம்காணப்பட்ட நிலையில் மூன்று கட்டங்களாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இதுவரை 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில்  தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

இரண்டு கட்டங்களின் போது 40 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு கடந்த 04.07.2024 அன்று ஆரம்பமாகி 15.07.2024 வரை இடம்பெற்று  12 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை குறித்த விடயம் தொடர்பாக எவ்வித உண்மைகளும்  வெளிவராத நிலையில்  குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post