வடக்கு கிழக்கு இணைப்பை மேற்கொள்ள மாட்டோம் மாகாணத்திற்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழக்கமாய் டோம் என கூறும் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வடக்கு கிழக்கிற்கு வாக்கு கேட்டு வரத் தேவையில்லை என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் ஊடகாமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது நாமல் ராஜபக்ச வடக்கு கிழக்கு இணைப்பு தேவை இல்லை 13 நடைமுறைப்படுத்த மாட்டேன் என கூறுவது தொடர்பில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் மாகாண பொலிஸ் காணி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள நிலையில் அதனை வழங்காத எந்தவொரு வேட்பாளரையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தென்னிலங்கையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் வடக்கு கிழக்கு ஒன்றிணையக் கூடாதென்றும் அதிகாரப் பகிர்வுக்கு என்றுமே இடமில்லை என்றும் பொலிஸ் காணி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவித்ததாக செய்திகளில் பார்த்தேன்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததுமுதல் தமிழருடைய அரசியலுரிமை பிரச்சினை அவ்வப்போது பேசப்பட்டுவந்தாலும் காலப்போக்கில் பல்வேறு ஒப்பந்தங்கள் பல்வேறு இணக்கப்பாடுகள் பல்வேறு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.
அவற்றில் முன்னேற்றங்கள் காணப்படாமையால் தரப்படுத்தலூடாக தமிழ் மக்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆயுதப்போராட்டங்கள் தலைதூக்கி பல உயிர்த் தியாகங்கள் சொத்தழிவுகள் அங்கவீனங்கள் ஏற்பட்டது.
சொல்லெணா துயரங்களுக்கு பின்னர் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக மாகாண அரசு முறைமை கொண்டுவரப்பட்டது.
13 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக கிடைத்த அந்த குறைந்த அதிகாரம் கொண்ட மாகாண முறைமைக்கு அதிகாரங்களோ அதிகாரப் பகிர்வோ வழங்க மறுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பிரசார நடவடிக்கைகளுக்கு வரத்தேவையில்லை.
அவ்வாறான வேட்பாளர்களை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment