வடக்கு ரயில் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும், இதனாலேயே அந்த பாதையில் ரயில் சேவைகளை மீள ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளன என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
வடக்கு ரயில் சேவையை ஆரம்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் நேற்று (22) செவ்வாய்க்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மஹவ முதல் வடக்கு வரையான ரயில் பாதையின் பராமரிப்புக்காகவும் மற்றும்
சமிக்ஞை கட்டமைப்பை புதுப்பிக்கவும் பொறுப்புகள் இந்திய நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
அநுராதபுரம் முதல் வடக்கு வரையான பகுதி நிறைவு செய்யப்பட்டிருந்தது. மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான பகுதி முழுமையாக நிறைவு செய்யப்படவில்லை.
இதில் ஏற்பட்டுள்ள பிரச்சினையானது பாதை நிர்மாணம் ஒரு மனுக்கோரலுக்கும்
சமிக்ஞை கட்டமைப்பு வேறு மனுக்கோரலுக்கும் ஒரே நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருந்தது.
இதில் தண்டவாள அபிவிருத்தி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை சமிக்ஞை கட்டமைப்பை பூர்த்தி செய்ய இன்னும் ஒருவருட காலம் கோரப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கம் இந்த ஒப்பந்தங்களை தவறான முறையிலேயே வழங்கியுள்ளது.
சமிக்ஞை கட்டமைப்பு பூர்த்தி செய்யப்படும் வரையில் ரயில்கள் ஓட முடியாது.
ஆனால் எமது ரயில்வே திணைக்களத்தின் இருந்த சமிக்ஞை கட்டமைப்பில் திருத்தங்களை மேற்கொண்டு ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரயில் நிலைய புனரமைப்பும் நடக்கின்றது.
இந்த வேலைத்திட்டம் சரியான முறையில் முன்னெடுக்கப்படாமையினால் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. பல சந்தர்ப்பங்களில் ரயில் பயணிக்க முடியாது திரும்பி வந்த சந்தர்ப்பங்களும் உள்ளன.
எவ்வாறாயினும் இந்த வேலைத்திட்டத்தில் குறைபாடுகள் உள்ளன. இது எங்களால் செய்யப்பட்டவை அல்ல, எங்களுக்கு முன்னர் இருந்தவர்கள் செய்தவையே என்றார்.
Post a Comment