ஒரு பாடல் பதிவுக்கு பாடகர் கே.ஜே. யேசுதாஸ் வர தாமதமானதால், அந்த பாடலை இளையராஜா பாடுகிறார். அப்புறம் வந்த கே.ஜே. யேசுதாஸ் அதற்கு என்ன ரியாக்ஷன் கொடுத்தார் தெரியுமா? காலத்தால் அழியாத அந்த புகழ்பெற்ற பாடல் இதுதான்.
மன்னராட்சி முடிந்து மக்களாட்சி மலர்ந்து பல ஆண்டுகள் ஆனாலும், தமிழ்நாட்டில் தமிழ் திரையிசையில் இன்னும் ராஜாவின் ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. ஆம், தமிழ் திரையிசையில், இளையராஜா கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு ஆட்சி செய்கிறார். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 3 தலைமுறைகளைப் பார்த்துவிட்டார். இன்னும் இளையராஜா 2கே கிட்ஸ்களையும் ரசித்து கேட்கவைக்கிறார்.
இசைஞானி இளையராஜா ஆயிரம் படங்களுக்கு மேல், 5000 பாடல்லளுக்கு இசையமைத்திருக்கிறார். நிச்சயமாக ஒவ்வொரு பாடலுக்கு பின்னாலும், ஒரு கதை இருக்கும். அதிலும், இளையராஜா இசைக்கு மட்டுமல்ல அவரே பாடும் பாடல்களுக்கு என்று ஒரு பெரிய வெறித்தனமான ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள்.
நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண், இசைஞானி இளையராஜா குரல் பற்றி பேசும்போது, இசைஞானி இளையராஜாவின் பாடும்போது மற்ற பாடகர்களைவிட மிக நுட்பமாக உணர்வுகளை கடத்திவிடுவார் என்கிறார். இளையராஜா-வின் குரல் ஒரு சாமானியனின் இசைக்குரல், சாமானியனின் குரலில் சாஸ்திரிய சங்கீதம் முதல் எல்லா பாடல்களையும் பாட முடியும் என்பதை வெளிப்படுத்தும் குரல். அதனால்தான், இளையராஜா பாடிய பாடல் ஒரு காந்தக் குரலாக மனதுக்கு பிடித்த குரலாக இருக்கிறது.
அதே போல, தமிழ் திரையிசையில், 80-கள் மற்றும் 90-களில் தனது குரலால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்தார் கே.ஜே. யேசுதாஸ். இசை ரசிகர்கள் அவரை கந்தர்வக் குரலோன் என்று போற்றுகிறார்கள். கே.ஜே. யேசுதாஸ் குரலில் வழிந்தோடும் சோகத்தின் இனிமை, அமைதியின் அதிசயம் பலரையும் ஈர்ப்பவை.
இசைஞானி இளையராஜா இசையில், கே.ஜே. யேசுதாஸ் நிறைய பாடல்களைப் பாடியிருக்கிறார். பல பாடல்கள் காலத்தால் அழியாத புகழ்பெற்ற பாடல்கள்.
அப்படி, இசைஞானி இளையராஜா - கே.ஜே. யேசுதாஸ் இடையே நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் சமூக ஊடகங்களில் வீடியோவாகப் பகிரப்பட்டு வருகிறது.
இளையராஜ ஒரு பாடல் பதிவுக்காக பாடகர் கே.ஜே. யேசுதாஸ் வருகைக்காக காத்திருக்கிறார். கே.ஜே. யேசுதாஸ் வருவதற்கு தாமதமானதால், அந்த பாடலை இளையராஜா சும்மா ஒரு முறை அவரே பாடி பதிவு செய்கிறார். கே.ஜே. யேசுதாஸ் வந்தால் பாட வைக்க இருக்கிறார்.
பிறகு, யேசுதாஸ் வருகிறார். பாடல் பதிவுக்கு முன்பு, இசைஞானி இளையராஜா, அந்தப் பாடலை இப்படிதான் பாட வேண்டும் என்று கூறுகிறார். தான் பாடியதைப் போட்டுக் காட்டுகிறார். அந்த பாடலைக் கேட்ட கே.ஜே. யேசுதாஸ், வியந்துபோய் நீங்கள் பாடியதே நன்றாக இருக்கிறது. இதற்கு மேல் நன்றாக என்னால் பாடமுடியாது. நீங்கள் பாடியது அப்படியே வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். அப்படி என்ன பாடல் இளையராஜா பாடினார் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் தோன்றுகிறதா? ஆம், தாய் மூகாம்பிகை படத்தில், இடம்பெற்ற, ‘ஜனனி ஜனனி ஜெகம் நீ அகம் நீ, ஜெகத்காரி நீ’ என்ற பாடல்தான் அது.
இந்த பாடலைக் கேட்கும் எவரும் இளையராஜாவின் குரலில் உள்ள ஆன்மீகம், பக்திநிலையை உணர முடியும். நீங்களும் கேட்டுப் பாருங்கள், கே.ஜே. யேசுதாஸ் ஏன் அப்படி சொன்னார் என்று அப்போது புரியும்.
Post a Comment