வரும் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா,இந்தியா போன்ற அணிகள் பங்கேற்க உள்ளது.
இந்த சூழலில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் அரசியல் தொடர்பான வேறுபாடுகள் இருப்பதால் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட மாட்டோம் என பிசிசிஐ அறிவித்தது. எனினும் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியா வரவில்லை என்றால் இந்தியா இல்லாமல் இந்த தொடரை நடத்துவோம் என்று அறிவித்தது.
மேலும் கடந்த 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க தாங்கள் வந்தது போல் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு இந்தியா வரவேண்டும் என்றும் பாகிஸ்தான் வலியுறுத்தி இருந்தது. இந்த சூழலில் தான் ஐசிசி தலைவராக ஜெயிஷா பதவி ஏற்றார். இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்திய அரசும் ஒப்புதல் வழங்கவில்லை. இதன் காரணமாக தங்களால் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட முடியாது என்றும், இதன் காரணமாக ஹைபிரிட் முறையில் கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று பிசிசிஐ வலியுறுத்தியது. இதனை அடுத்து இதற்கு பாகிஸ்தானால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை.
இதன் காரணமாக இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் வேறு ஒரு நாட்டில் நடத்த பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழலில் இறுதிப்போட்டி லாகூரில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் லாகூரில் இருந்து வேறு ஒரு நாட்டிற்கு நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.
இதனையும் பாகிஸ்தான் ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் இறுதிப் போட்டி துபாய் அல்லது இலங்கையில் நடத்தப்படும் என தெரிகிறது. இந்தியா வேறு நாட்டிற்கு சென்று வருவதற்காக ஐசிசி ஏற்கனவே பட்ஜெட்டில் இருந்து 60 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கி இருக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரையே வேறு நாட்டுக்கு மாற்றி விடுவோம் என ஐசிசி மிரட்டியதாகவும், இதனால் வரும் வரை லாபம் என நினைத்து பாகிஸ்தான் இதற்கு அடிப்பணிந்ததாகவும் கிரிக்கெட் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
Post a Comment