கடந்த ஆட்சி காலத்தில் ஜேவிபியினரும் மதுபான சாலைகளை பெற்றார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் குற்றம்சாட்டினார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கீதநாத் காசிலிங்கம் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆட்சி காலத்தில் பெறப்பட்ட மதுபான சாலைகள் தொடர்பான விபரங்களை அனுர குமார திஸாநாயக்க வெளியிடுவேன் என தெரிவித்தார்.
தற்போது சில வாரங்களுக்கு முன்னர் ஊடக சந்திப்பை நடத்திய அக்கட்சியின் பிரமுகர் வசந்த சமரசிங்க மதுபான சாலைகளை பெற்றவர்கள் மற்றும் சிபாரிசு செய்தவர்களின் விபரங்களை வெளியிடப்போவதாக சொன்னார்.
ஆனால் மூன்று வாரங்கள் கடந்தும் இதுவரை அந்த பட்டியல் வெளியிடப்படவில்லை. இதன்மூலம் ஜேவிபியினரும் மதுபான சாலை அனுமதிப்பத்திரங்களை பெற்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நான் மஹிந்த ராஜபக்ஷவுடன் 15 வருடங்களாக இணைந்து வேலை செய்கிறேன். இதுவரை மதுபான சாலை அனுமதிப்பத்திரமோ, மதுபான போத்தலையோ நானும் பெற்றதில்லை. எவருக்கும் பெற்றுக்கொடுத்ததில்லை.
தான் மதுபான சாலை அனுமதிப்பத்திரத்தை பெறவில்லை என தெரிவித்து சத்தியக்கடதாசியை தயாரித்து ஊடக சந்திப்பில் வெளிப்படுத்தினார். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் இதனை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
13ம் திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், 13 தொடர்பாக ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவும் நாமல் ராஜபக்ஷவும் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தாலும் எனக்கு அதற்கு மாறான நிலைப்பாடு உண்டு.
சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சி காலத்தில் தமிழருக்கு தீர்வு வழங்குவதற்கு எதிராக ரணில் விக்ரமசிங்கவும், அனுர குமார திஸாநாயக்கவும் செயற்பட்டனர். அவர்கள் தற்போது தமது நிலைப்பாட்டை மாற்றும் போது ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவும் தமது நிலைப்பாட்டை ஒரு காலத்தில் மாற்றும்.
ஆட்சி வருவதற்கு முன் 13ம் திருத்தத்தை அமுல்படுத்தபோவதாக சொன்ன அனுர குமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்த பின்னர் தனது உண்மையான நிலைப்பாட்டை காட்டியுள்ளார்.
13ம் திருத்தம் தொடர்பாகவும்
ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுன தொடர்பாகவும் பல்வேறு பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்துள்ள ஜேவிபியின் உண்மை முகம் இன்று வெளிவந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அனுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவாக வக்காளத்து வாங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் எங்கே கொண்டு சென்று முகத்தை வைக்கப் போகிறார்கள்.
ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் செயற்பாடுகள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்பட்டாலும் அதனை திருத்தி முன்கொண்டு செல்ல தயாராக இருக்கிறோம்.
தெற்கில் முன்னர் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இம்முறை களத்தில் இல்லாத நிலையில் பல இளைஞர்களும் புதிய முகங்களும் களத்திற்கு வந்துள்ளனர். இந்த மாற்றம் வடக்கிலும் ஏற்பட வேண்டும் என்றார்.
Post a Comment