"எனக்கு மறுவாழ்வு கொடுத்ததே கோலி, ரவி சாஸ்திரி தான்".. நெகிழ்ந்த ரோஹித் சர்மா.. என்ன சொன்னார்? - Yarl Voice "எனக்கு மறுவாழ்வு கொடுத்ததே கோலி, ரவி சாஸ்திரி தான்".. நெகிழ்ந்த ரோஹித் சர்மா.. என்ன சொன்னார்? - Yarl Voice

"எனக்கு மறுவாழ்வு கொடுத்ததே கோலி, ரவி சாஸ்திரி தான்".. நெகிழ்ந்த ரோஹித் சர்மா.. என்ன சொன்னார்?



முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான் தனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் மறுவாழ்வு அளித்தார்கள் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மனம் திறந்து பேசி இருக்கிறார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்தார். அப்போது பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்தார்.

அவர்கள் இருவரும் அணியில் பல வீரர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே வந்ததாக அப்போது குற்றச்சாட்டு எழுந்து வந்தது. டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்குவதற்கு அவர்கள் திட்டமிட்டதாக அப்போது ஒரு பேச்சு இருந்தது. ஆனால், 2019 ஆம் ஆண்டு முதல் ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் மிடில் ஆர்சர் பேட்ஸ்மேன் என்ற இடத்தில் இருந்து துவக்க வீரர் என்ற இடத்திற்கு மாறினார்.

துவக்க வீரராக அவர் சிறப்பாக விளையாடியதை அடுத்து இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர வீரராகவும் மாறினார். 2013 முதல் 2018 வரை வெறும் 27 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்த ரோஹித் சர்மா, அதன் பின் டெஸ்ட் அணியில் நிலையான வீரராக மாறியதுடன் தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். இந்த நிலையில், தனக்கு டெஸ்ட் அணியில் துவக்க வீரராக ஆட வாய்ப்பளித்து தனது மறு பிறப்புக்கு விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி உதவினார்கள் என தற்போது ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார் ரோஹித் சர்மா.

2019 அக்டோபர் மாதம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா துவக்க வீரராக இறங்கி 176 ரன்கள் குவித்தார். அதற்கு முன்பு ஒரு பயிற்சி போட்டியில் அவர் துவக்க வீரராக களம் இறக்கப்பட்டார். அதில் அவர் டக் அவுட் ஆகி இருந்தார். எனினும், அவருக்கு மீண்டும் டெஸ்ட் போட்டியின் போது துவக்க வீரராக ஆட வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதில் 176 ரன்கள் அடித்து அனைவரையும் மிரள வைத்தார் ரோஹித். அது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், "தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்க்ஸில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் தான் எனக்கு துவக்க வீரராக ஆட வாய்ப்பு அளித்தார்கள். என்னை நம்பினார்கள். டெஸ்ட் அணியில் மேல் வரிசையில் என்னை ஆட வைக்கும் முடிவை எடுப்பது அத்தனை எளிதல்ல." என்றார்.

மேலும், "ஒரே ஒரு பயிற்சி போட்டியில் என்னை ஆடுமாறு சொன்னார்கள். நான் அதை செய்தேன். அதில் நான் முதல் பந்திலேயே அவுட் ஆகி இருந்தேன். ஆனால், அதன் பின் நான் எனக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். அது எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது பிறப்பு என்று எண்ணினேன். இந்த வாய்ப்பை நான் நிச்சயம் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும்.: என்றார் ரோஹித்.

,மேலும், "நான் அவர்களிடம். "எனது இயல்பான ஆட்டத்தை தான் ஆடுவேன். நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு அழுத்தத்தை சமாளிக்க முயல மாட்டேன். என் விருப்பம் போல இயல்பாக ஆடுவேன். அது டெஸ்ட் போட்டியின் முதல் பந்தோ இல்லையோ நான் அதிரடியாக அடித்து ஆடுவேன்" என்றேன். அவர்கள் நான் என்ன செய்ய விரும்பினேனோ அதை செய்ய முழு சுதந்திரம் அளித்தார்கள். 2015 இல் இருந்து ரவி சாஸ்திரி என்னை துவக்க வீரராக ஆடுமாறு சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால், அது எனது கைகளில் இல்லை." என்றார் ரோஹித் சர்மா.

0/Post a Comment/Comments

Previous Post Next Post