இந்திய அணியின் வருங்கால கேப்டனாக சுப்மன் கில் முன்னிறுத்தப்பட்டு வருகிறார். ஆனால், அவரை விரைவில் வேறு ஒரு இளம் வீரர் முந்த வாய்ப்பு உள்ளது. அது ஜெய்ஸ்வால் தான். அவர் சுப்மன் கில்லை விட டி20 போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இன்னும் ஒரு நாள் போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனினும், தற்போது உள்ள சூழ்நிலையில் டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளே முக்கியமான கிரிக்கெட் போட்டிகளாக உள்ளன. மேலும், ஜெய்ஸ்வாலுக்கு ஒருநாள் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் சிறப்பாகவே விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். ஏனெனில், அதிரடியாக ஆட வேண்டிய டி20 போட்டிகளிலும், அதிக ரன் குவிக்க வேண்டிய டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால், ஒரு நாள் போட்டிகளிலும் கூட அவர் சிறப்பாகவே செயல்படுவார்.
சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இடையேயான பேட்டிங் செயல்பாட்டை ஒப்பிட்டு பார்த்தாலே சுப்மன் கில்லை விட ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி வருவதை நாம் புரிந்து கொள்ளலாம். டி20 போட்டிகளை பொறுத்தவரை ஜெய்ஸ்வால் 22 இன்னிங்ஸ்களில் 723 ரன்கள் சேர்த்து இருக்கிறார். அவரது சராசரி 36 ஆக உள்ளது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 164 ஆக உள்ளது. சுப்மன் கில் டி20 போட்டிகளில் 21 இன்னிங்க்ஸ்களில் 578 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 30 ஆக உள்ளது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 139 ஆக உள்ளது.
அதே போல, டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் 20 இன்னிங்ஸ்களில் 1217 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது சராசரி 64 ஆக உள்ளது. இதுவரை 3 சதம் மற்றும் 7 அரை சதங்கள் அடித்திருக்கிறார். அதாவது தான் ஆடிய 20 இன்னிங்க்ஸ்களில் 10 இன்னிங்ஸ்களில் 50 ரன்களுக்கும் மேல் சேர்த்து இருக்கிறார். சுப்மன் கில் இதுவரை 50 இன்னிங்க்ஸ்களில் 1656 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி டெஸ்ட் போட்டிகளில் 37 ஆகவே உள்ளது.
அவர் இதுவரை 5 சதம் மற்றும் 6 அரை சதங்களை அடித்திருக்கிறார். அதாவது அவர் பேட்டிங் ஆடிய 50 இன்னிங்ஸ்களில் 11 முறை மட்டுமே 50 ரன்களுக்கும் அதிகமாக ரன் சேர்த்து இருக்கிறார். அந்த வகையில் பார்த்தால் டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில்லை விட யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகவும் சிறப்பாக விளையாடி வருவதை புரிந்து கொள்ளலாம். நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது சுப்மன் கில் டெஸ்ட் அணியிலும், டி20 அணியிலும் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்வதே சிரமமான ஒன்றாக இருக்கும். எனவே, இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக ஜெய்ஸ்வால் வர அதிக வாய்ப்புள்ளது.
Post a Comment