அரசு விழாவில் முதல்வரோடு டாக்டர் ராமதாஸ், அன்புமணி? நடப்பது என்ன? - Yarl Voice அரசு விழாவில் முதல்வரோடு டாக்டர் ராமதாஸ், அன்புமணி? நடப்பது என்ன? - Yarl Voice

அரசு விழாவில் முதல்வரோடு டாக்டர் ராமதாஸ், அன்புமணி? நடப்பது என்ன?



வரும் நவம்பர் 28ஆம் தேதி விழுப்புரத்தில் 21 சமூக நீதி போராளிகளின் நினைவு மணிமண்டபத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.

1987 ஆம் ஆண்டு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு காரணமாக உயிரிழந்த 21 தியாகிகளுக்கான இந்த மணிமண்டப திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலினோடு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் நேற்று முதல் பரவி வடமாவட்ட அரசியலில் பரபரப்பை கூட்டி இருக்கிறது.

ஏற்கனவே திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற விடுதலை சிறுத்தைகள் கட்சியை மையமாக வைத்து பல்வேறு சர்ச்சைகள் எழுவதும் அடங்குவதுமாக இருக்கின்றன. இந்த நிலையில் விசிகவுக்கு செக் வைக்கும் வகையில், 21 சமூக நீதிப் போராளிகள் நினைவு மணிமண்டப திறப்பு விழாவுக்கு டாக்டர் ராமதாஸை அழைக்கும் திட்டம் திமுகவின் பரிசீலனையில் இருக்கிறது என்றும் திமுகவுக்குள்ளேயே ஒரு தகவல் உலவுகிறது.

இன்னும் ஒருபடி மேலே போய், “இவ்விழாவில் கலந்துகொள்வதற்கான அழைப்பு டாக்டர் ராமதாஸுக்கு சப் கலெக்டர் மூலமாக அனுப்பப்பட இருக்கிறது. டாக்டர் ராமதாஸ் தற்போது குடும்பத்துடன் துபாய் சென்றிருக்கிறார். அவர் நாடு திரும்பியதும் இதுகுறித்து முடிவெடுப்பார்” என்று திமுகவிலேயே சிலர் கூறுகிறார்கள்.

மணிமண்டப திறப்பு விழாவில் டாக்டர் ராமதாஸ் கலந்துகொள்வார் என்று செய்தி கிளம்பியதற்கு காரணம் நேற்று (நவம்பர் 23) விழுப்புரத்தில் நடந்த ஒரு சம்பவம்தான்.

இதுகுறித்து திமுக வட்டாரத்தில் பேசினோம்.

“திமுக துணைப் பொதுச் செயலாளரும் வனத்துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நவம்பர் 23 ஆம் தேதி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.

விழுப்புரம் வடக்கு மாசெ., கௌதம சிகாமணி கூட்டிய இந்த கூட்டத்தில் மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் அ.சிவா M.L.A., மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் இரா.இலட்சுமணன் M.L.A உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நவம்பர் 27 ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகள் பற்றியும், நவம்பர் 28, 29 தேதிகளில் விழுப்புரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திலேயே சில திமுக நிர்வாகிகள் மணிமண்ட்ப திறப்பு விழாவுக்கு டாக்டர் ராமதாஸையும் அழைக்கலாம் என்று பொன்முடியிடம் தெரிவித்துள்ளனர். அப்போது அமைச்சர் பொன்முடி, இதுபற்றியெல்லாம் தலைவர் பார்த்துக் கொள்வார் என்று பதிலளித்திருக்கிறார்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் இருக்கிற பத்திரிகையாளர்களுடன் சாதாரணமாக தனது அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது பொன்முடிக்கு நன்கு அறிமுகமான லோக்கல் பத்திரிகையாளர் ஒருவர், ‘மணிமண்டப திறப்பு விழாவுக்கு டாக்டர் ராமதாஸை கூப்பிடுவீங்களா?’ என்று கேட்டிருக்கிறார். அப்போது பொன்முடி அவரிடம் உரிமையாக, ‘நீங்க சொன்னா கூப்ட்டுருவோம். பார்வையாளராக வந்து பாக்கட்டுமே’ என்று பதிலளித்திருக்கிறார். இந்த உரையாடல்தான் சில மணி நேரங்களில், ‘மணி மண்டபம் திறப்பு விழாவுக்கு டாக்டர் ராமதாஸ் அழைப்பு’ என்று செய்தியாக வந்துவிட்டது. மேலும் இன்றைய நாளிதழ்களிலும் இது செய்தியாகிவிட்டது.

இதையடுத்து முதல்வரின் தனி உதவியாளர் தினேஷ் அமைச்சர் பொன்முடியிடம் பேசியிருக்கிறார். தான் மிகவும் தனிப்பட்ட முறையில் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்ததை செய்தியாக்கிவிட்டார்கள் என்று விளக்கமளித்துள்ளார் பொன்முடி. அதுமட்டுமல்ல, உடனடியாக சம்பந்தப்பட்ட லோக்கல் செய்தியாளர்களைத் தொடர்புகொண்ட பொன்முடி, ‘ஏன்யா இப்படி பண்றீங்க? அறிவாலயத்துல உங்களை விட்டது தப்பா போச்சே’ என்று கோபித்துக் கொண்டிருக்கிறார்” என்கிறார்கள்.

இதே நேரம் இந்த செய்திகளை விசிகவினரும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நம்மிடம் பேசிய விசிக நிர்வாகிகள், “விழுப்புரத்தில் நடக்கும் அரசு விழாவுக்கு விழுப்புரம் எம்பி என்ற முறையில் விசிகவின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவிக்குமார்தான் அழைக்கப்பட வேண்டும். ஆனால், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்கள் என்ற வகையில் அதிமுகவின் சி.வி. சண்முகம், பாமகவின் டாக்டர் அன்புமணி ஆகியோரையும் அழைக்கலாம் என்று திமுகவுக்குள்ளேயே சிலர் பேசி வருகின்றனர்” என்கிறார்கள் விசிக வட்டாரத்தில்.

இதனால் சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபத் திறப்பு விழாவுக்கான அரசியல் முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post