2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் நிதிஷ் ராணாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் கேட்க மறுத்தது. அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. நிதிஷ் ராணா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் 2018 முதல் விளையாடி வந்தார்.
ஏழு ஆண்டுகளாக கொல்கத்தா அணிக்கு விசுவாசமாக இருந்த அவர் தற்போது அந்த அணியில் இருந்து வேறு அணிக்கு மாறி இருக்கிறார். இந்த நிலையில், நிதிஷ் ராணா மற்றும் அவரது மனைவி சாச்சி மார்வா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளனர். குறிப்பாக சாச்சி, கொல்கத்தா அணியால் விசுவாசத்தை வாங்க முடியாது என விளாசி இருக்கிறார்.
நிதிஷ் ராணா 2023 ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஆகவும் செயல்பட்டார். அவர் அந்த அணியின் முக்கிய வீரராகவும் இருந்தார். 2018 ஆம் ஆண்டு 3.40 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்ட அவர், கடந்த சீசனில் 8 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று வந்தார்.
அவர் கொல்கத்தா அணிக்கு மிகவும் விசுவாசமாக இருந்தார். அதே போல, கொல்கத்தா அணியும் அவரை முக்கிய வீரராக கருதியது. ஆனால், 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன் கொல்கத்தா அணி நிதிஷ் ராணாவை தக்க வைக்கவில்லை. கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் தன்னை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிச்சயம் வாங்கும் என நிதிஷ் ராணா பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.
ஆனால், ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 4.20 கோடிக்கு வாங்கியது. சிஎஸ்கே, ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகள் மட்டுமே அவருக்காக ஏலம் கேட்டன. கொல்கத்தா அணி அவரை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ஆர் டி எம் இருந்தது. அதை பயன்படுத்தி நிதிஷ் ராணாவை கூடுதலாக சில கோடிகளை கொடுத்து ராஜஸ்தான் அணியிடம் இருந்து வாங்கி இருக்க முடியும்.
ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் நிதிஷ் ராணா அதிருப்தி அடைந்தார். உடனடியாக அவர் சமூக வலை தளத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிங்க் நிற உடையை அணிந்து "ராயல்டி இஸ் பிங்க் (Royal-ty is Pink)" என பதிவிட்டு இருந்தார். அதாவது ஆங்கிலத்தில் "லாயல்ட்டி" (Loyalty) என்ற சொல்லை மாற்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெயரில் உள்ள ராயலை அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
லாயல்டி என்றால் விசுவாசம் என்று பொருள். அந்த வகையில், "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தான் விசுவாசம் ஆக இருந்தபோதும் அந்த அணி தனக்கு விசுவாசமாக இல்லை" என்பதை அவர் நையாண்டி செய்து இருந்தார்.
அடுத்து அவரது மனைவி சாச்சி தனது சமூக வலைதள பக்கத்தில், "விசுவாசம் அதிக மதிப்புடையது. அதை எல்லோராலும் வாங்க முடியாது." என குறிப்பிட்டு இருக்கிறார். அவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மறைமுகமாக சாடி இருக்கிறார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி உள்ளது. மேலும், நிதிஷ் ராணா மற்றும் அவரது மனைவி சாச்சி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சமூக வலைதளங்களில் பின் தொடர்வதை நிறுத்தி உள்ளனர்.
Post a Comment