ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் கடந்த நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதி களின் சவுதி அரேபியாவில் உள்ள ஜட்டா நகரில் நடந்து முடிந்தது. இதில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு ஏற்ற வீரர்களை வாங்கி குவித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனான ஹர்திக் பாண்டியா தங்களது அணி பலமாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல் முறையாக தனது மௌனத்தை கலைத்துள்ள ஹர்திக் பாண்டியா ஏலம் நடந்து கொண்டிருந்தபோது நான் அணி நிர்வாகத்துடன் தொடர்பில் தான் இருந்தேன் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், எந்த வீரர்களை ஏலத்தில் வாங்க வேண்டும் என்ற இலக்கு எல்லாம் எனக்கு தெரியும். இந்த மெகா ஏலத்தில் எங்களுடைய குழு சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக நம்புகிறேன். எங்களுடைய அணி நம்பிக்கையை அளிக்கும் விதமாக இருக்கிறது. நாங்கள் சரியான கலவையை இம்முறை கண்டுபிடித்து இருக்கின்றோம்.
எங்கள் அணியில் ட்ரெண்ட் பவுல்ட், தீபக்சாகர் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். அதே சமயம் வில் ஜாக்ஸ், ராபின் மின்ஸ் ,ரிக்கல்டன் போன்ற இளம் வீரர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். இது ஒரு நல்ல விஷயமாக பார்க்கின்றேன். நாங்கள் அனைத்து விதமான வீரர்களையும் தேர்வு செய்திருப்பதன் மூலம் குறைகளை சரி செய்து இருக்கின்றோம்.
ஏலத்தின் வடிவமே மிகவும் வித்தியாசமாகவும் கடினமாகவும் இருக்கும். நீங்கள் ஏலம் நடக்கும் போது நேரலையில் பார்த்தால் விறுவிறுப்பாகவும் சில சமயம் உணர்ச்சிவசமாகவும் இருக்கும். ஏனென்றால் சில வீரரை நீங்கள் வாங்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அப்போது வேறு அணி அவர்களை வாங்க நேரிடும்.
மொத்தத்தில் நாங்கள் நல்ல அணியை தயார் செய்திருக்கிறோம். மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்திருக்கும் புதிய வீரர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்களிடம் திறமை இருப்பதாலும் வெற்றி பெற வேண்டிய உத்வேகம் இருப்பதாலும் மட்டும்தான் நீங்கள் மும்பை இந்தியன்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறீர்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணிதான் என்னை கண்டுபிடித்தார்கள்.
பும்ராவை கண்டுபிடித்தார்கள். குர்னல் பாண்டியாவை கண்டுபிடித்தார்கள். திலக் வர்மாவை கண்டுபிடித்தார்கள். நாங்கள் அனைவருமே தற்போது இந்திய அணிக்காக விளையாடுகிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கடுமையாக உழையுங்கள்! பயிற்சி செய்யுங்கள்! இது அனைத்தும் செய்ய உங்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எல்லா வசதியும் செய்து உங்களை மேம்படுத்தும் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
Post a Comment