இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த வாஷிங்டன் சுந்தருக்கு பதிலளித்த அஸ்வினின் பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.
38 வயதாகும் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக டிசம்பர் 18 ஆம் தேதி தெரிவித்தார்.
இதுவரை டெஸ்ட்டில் மட்டும் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பெர்த் டெஸ்ட்டில் தேர்வு செய்யாததால் ஓய்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
முன்னாள் இந்திய வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பலரும் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய கிரிக்கெட் அணியின் இளம்வீரர் வாஷிங்டன் சுந்தரும் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ கிரிக்கெட் வீரராக தவிர்த்து ஆஷ் அண்ணா, நீங்கள் விளையாட்டின் உத்வேகமாகவும், வழிகாட்டியாகவும், உண்மையான சாம்பியனாகவும் இருந்திருக்கிறீர்கள். உங்களுடன் விளையாடியது பெருமையாக உள்ளது. நீங்கள் வந்த அதே மாநிலத்திலிருந்து வந்த நான், சேப்பாக்கத்தில் உங்களுக்கு எதிராகவும், உங்களுடன் சேர்ந்தும் விளையாடியிருக்கிறேன்.
நீங்கள் விளையாடுவதை பார்த்து வளர்ந்திருக்கிறேன். இந்த அனுபவங்களை எங்கு சென்றாலும் எடுத்துச்செல்வேன். நீங்கள் அடுத்து செய்யப்போகும் அனைத்து முயற்சிகளுக்கு வெற்றியும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த அஸ்வின், நடிகர் விஜய், சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்து வெளியான தி கோட் திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற காட்சியில், “துப்பாக்கிய பிடிங்க சிவா...” வசனம் இடம்பெற்றிருக்கும். இதேபோல, அஸ்வினும் துப்பாக்கிய பிடிங்க வாஷி என்று பதிவிட்டுள்ளார். இதனை ஸ்க்ரீன்-ஷாட் எடுத்து ரசிகர் இணையத்தில் வைராலாக்கி வருகின்றனர்.
Post a Comment