இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வொன்றே நாட்டின் சுபீட்சத்துக்கு வழி - சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் சிறீதரன் எம்.பி வலியுறுத்தல்.
அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் உறுதிப்பாடடைந்த சுபீட்சம் மிக்க நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், கடந்த எண்பது ஆண்டுகளாக புரையோடிப் போயிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதொன்றே வழியாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
சுவிஸ் தூதரகத்தினால் அழைக்கப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை (07) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது.
இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்குறித்த விடயத்தை வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இந்தச்சந்திப்பில் சுவிஸ் நாட்டின் வெளிநாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவி செயலாளரும், சமாதானம் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் தலைவருமான ரிம் எண்டர்லின் (Tim Enderlin), இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் Dr.சிரி வோல்ற் (Siri Walt), இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் மனிதப் பாதுகாப்பிற்கான முதன்மைச் செயலாளர் ஜெஸ்ரின் பொய்லற் (Justin Boillat), சுவிஸ் தூதரகத்தின் மூத்த தேசிய திட்ட அதிகாரி சுசந்தி கோபாலகிருஸ்ணன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், பத்மநாதன் சத்தியலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
Post a Comment