இவ்வாறு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ் கல்வியங்காட்டிலுள்ள அவரது அலவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது..
ஆனாலும் சில விடயங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அது எங்களுடைய பொறுப்பு. உண்மையை மக்களும் அறிந்து கொள்ள வேண்டிய தேவையும் இருக்கிறது.
குறிப்பாக நானும் பதில் செயலாளர் சத்தியலிங்கமும்
மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு சென்று சந்தித்து சுகயீனம் தொடர்பிலே கலந்துரையாடியிருந்தோம்.ஆனால் நாங்கள் அரசியல் பேசியதாகவும் கடுந் தொனியில் கதைத்திருந்ததாகவும் சிவமோகன் மற்றும் சசிகலா ரவிராஜ் ஆகியோர் கூறியிருப்பது முற்றிலும் பொய்யானது. அது அவர்களின் கற்பனைவாதங்களே தவிர வேறொன்றும் இல்லை.
ஆனாலும் அவரின் மரணத்திற்கு நாங்கள் தான் காரணம் என்றவாறாக திட்டமிட்டு விசம்ப் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டு இருக்கிறது. இதன் உண்மையை எமது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் வைத்திய சாலையில் நானும் குலநாயகமும் மாவை சேனாதிராசாவை சென்று பார்வையிட்டு இருந்தோம். அதன் பின்னர் நாங்கள் வருகிற போது மாவை சேனாராசாவின் சகோதரி குலநாயகத்துடன் முரண்பட்டுள்ளார்.
ஆனால் மாவை சேனாதிராசா இருப்பதற்கு தனது வீட்டைக் கொடுத்தும் மாவை சேனாதிராசா தாக்குதலில் காயமடைந்த பின்னர் அவரைப் பராமரித்ததும் குலநாயகம் தான். உண்மையில் மாவைக்கும் குலநாயகத்திற்கும் இடையே குடும்ப உறவுமுறை இருந்தது.
ஆனால் மாவையின் சகோதரியின் பேச்சால் மனமுடைந்த குலநாயகம் இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ளாமல் தவிர்த்திருந்தார். குலநாயகத்திற்கு நடந்த இந்த சம்பவம் எல்லாம் மிகவும் கவலைக்குரியது.
மாவை சேனாதிராசா மரணமடைந்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடன் தொடர்பு கொண்டு கட்சி தலைமையகத்திற்கு அவரது உடலை கொண்டு வர வேண்டிய தேவை இருக்கிறது என்றும் ஆனபடியினால் மாவையின் குடும்பத்தினருடன் கலந்து பேசி அந்த விடயத்தை நீங்கள் பொறுப்பெடுத்து செய்யுங்கள் எனக் கேட்டிருந்தேன்.
அதன் பின்னர் எனக்கு அழைப்பெடுத்த சிறிதரன் தான் கதைத்திருப்பதாகவும் இந்த கிடயத்தில் முன்னேற்றம் இருப்பதாகவும் நீங்கள் வந்தால் தொடர்ந்து பேசலாம் என்றவாறாக சொல்லியிருந்தார். இதற்கமைய நானும் சென்று பேசியிருந்தேன். இந்த விடயத்தில் சிறிதரன் முழுமையான ஒத்துழைப்பை வரங்கியும் இருந்தார்.
ஆனால் இறுதிச் சடங்கிற்கு முதல் நாள் இரவு அழைப்பெடுத்த சிறிதரன் கட்சி அலுவலகத்துற்கு உடலை கொண்டு வருவதை குடும்பத்தினர் விரும்பவில்லை எனக் கூறியிருந்தார்.
இதன் பின்னர் கட்சி உறுப்பினர்கள் 18 பேரின் பெயர் விபரங்களை படங்களுடன் போட்டு மாவையின் மரணத்திற்கு காரணமான துரோகிகள் என்றவாறாக பல இடங்களில் பனர்களை கட்டித் தொங்க விட்டிருந்தார்கள்.
உண்மையல் இது எல்லாம் மிகப் பெரிய அபாண்டமான விசம்ப்பிரச்சாரம் தான். அந்தப் பிரச்சாரத்தில் வெளிப்படுத்திய அந்த கடிதம் கூட ஒரு கோரிக்கை கடிதம் மட்டும் தான். ஆனால்
அதில் கையெழுத்து வைத்த அத்தனை பேரையும் துரோகிப்பட்டம் கட்டி அக் கடிதத்தின் பிரதியை சிலர் காவிக் கொண்டு திரிந்தனர்.
இந்த விடயங்கள் எல்லாவற்றையும் தொகுத்து திட்டமிட்டு விசமப் பிரசாத்தை சிலர் முன்னெடுத்து இருக்கின்றனர். இதில் வெறுமனே தமிழரசுக் கட்சி சார்ந்தவர்கள் தான் இருக்கின்றார் என்றில்லை. தமிழரசுக் கட்சியை ஓரம்கட்டலாம் ஒழித்து கட்டலாம் என கங்கணம் கட்டியவர்களின் சதியும் இதில் இருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்கின்றன.
இந்தக் குழுப்பங்களுக்கு மத்தியில் இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி தமிழரசுக் கட்சியை உடைத்து விடலாம் என்பற்காக இவ்வாறு செய்திருக்கலாம் எனவும் நான் கருதுகிறேன்.
அந்தக் காரணத்தினாலே காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கூட முறைப்பாட்டை பதிவு செய்திருக்கிறேன். அந்த 18 பேரும் மத்திய செயற்குழு உறுப்பினர்கள். அவர்களால் என்னிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கட்சியின் தலைவர் என்ற வகையில் நானும் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளேன். அதுசம்பந்தமாக விசாரணைகள் நடக்கிறது.
ஆனால் மரணத்திற்கு நாங்கள் தான் காரணமென கூறுகிற அந்த விசமப் பிரச்சாரத்தை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
உண்மையில் இது எங்கள் கட்சிக்கு எதிரான திட்டமிட்ட அபாண்டமான பிரச்சாரம். இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இங்கு இன்னுமொரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மாவைக்கும் எனக்கும் இடையிலான உறவு 30 வருடங்களாக இருக்கிறது. மாவைக்காக தேசிய பட்டியல் கேட்டு சம்பந்தனுடன் வாதீடியதும் நான்தான். அது மட்டுமல்லாது கட்சிக்குள்ளும் வெளியிலும் மாவைக்கு எதிராக ஏதும் நடக்கிற போதும் அவருக்கு ஆதரவாக நின்று பேசியவனும் நான் தான். அப்படி எங்களுக்கிடையே நல்ல உறவு இருந்தது.
அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதனின் மரணச் சடங்கில் இப்படி ஒரு குழப்பமான வேலையை செய்தது தெய்வ நீதிக்கே மாறான ஒரு விசயம். இதை எல்லாம் யார் யார் செய்தார்கள் என்ற விசாரணையை பொலிஸார் ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த விசாரணையை தொடர்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
குறிப்பாக அந்த பனர்களை அடித்தவர்கள் கொண்டு போனவர்கள் கட்டியவர்கள் எல்லாவற்றையும் பொலிஸார் பார்ப்பார்கள். ஏனெனில் இது எல்லாம் இருட்டிலே செய்த விடயங்கள் இல்லைத்தானே. ஆனபடியால் இந்த துரோகத்தின் வெளிப்பாடு கட்டாயம் வெளியில் வரும். அந்த உண்மை எப்போதும் வெளி வரும். அப்போது பார்த்துக் கொள்ளலாம்.
இந்த துரோக தனத்தை செய்தது எமது கட்சிகாரர் மட்டுமில்லை. அரச புலனாய்வு வெளிநாட்டு சக்திகள் ஊடுருவல் சக்திகள் மாற்றுக் கட்சிகள் என எல்லாமே இதில் சம்பந்தபட்டிருக்கின்றது.
ஏனென்றால் இந்த இடத்திலே தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்தலாம் அழித்துவிடலாம் என்ற எண்ணப்பாடு அங்கே இருந்திருக்கிறது என்பதை எங்களால் உணரக் கூடியதாக இருக்கிறது.
தமிழ் மக்களின் பாரம்பரிய கட்சியாக இருக்கிற தமிழரசுக் கட்சியை அழித்து விட வேண்டுமென்ற ஒரே ஒரு காரணத்திற்காக பலர் கங்கணம் கட்டிக் கொண்ட திரட்சி தான் மாவையின் மரணச்சடங்கில் இவ்வாறான குழறுபடிகளை திட்டமிட்டு மேற்கொண்டுள்ளனர்.
கட்சியை அழித்தோ அல்லது பிளவுபடுத்தியோ செய்யக் கூடிய செயற்பாடுகளை கட்சிக்குள் இருந்து எவரும் செய்வதை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தவிர்க்க முடியாததாக இருக்கின்றது.
ஆனபடியால் கட்சியின் அடுத்த கூட்டத்தில் இந்த விடயம் பிரஸ்தாபிக்கப்படுகிற போது சம்பந்தபட்டவர்களுக்கு எதிராக பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்றார்.
Post a Comment