ஆயுதப் பயிற்சி பெற்று சட்டவிரோதமாக இராணுவத்தில் இருந்து வெளியேறும் பெருமளவானோர் பாதாள உலகத்தில் இணையும் போக்கு காணப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) திரு.சம்பத் துய்யகொண்ட தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவ்வாறானவர்களை கைது செய்யுமாறு சற்று முன்னர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதப் பயிற்சி பெற்று தலைமறைவானவர்களை குறுகிய காலத்தில் கைது செய்ய இராணுவமும் பொலிஸாரும் வல்லவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், செயலில் இருக்கும் இராணுவத்தினரும் குற்றவாளிகளுடன் தொடர்பு கொள்கிறார்களா என ஊடகவியலாளர்கள் கேட்டனர்.
இதற்குப் பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர், பொருளாதாரச் சிக்கல்கள், போதைப்பொருள் பாவனை போன்ற காரணங்களுக்காக குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்கும் படையினர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த படையினர் எதிர்காலத்தில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment