வடக்கு மாகாணத்தின் மிக முக்கியமான மருத்துவமனையாக உள்ள யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என வடமாகாண ஆளுநர் கோரிக்கையினை முன் வைத்துள்ளார் .
வடக்கு மாகாணத்தின் மிக முக்கியமான மருத்துவமனையாக உள்ள யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் எனவும் அதற்குரிய உள்கட்டுமானங்களுக்கான உதவிகள் தொடர்பிலும் ஆராயுமாறும் வடமாகாண ஆளுநர் ந.வேதநாயகன் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன், ஐ.நா. முகவர் அமைப்பான யு.என்.எப்.பி.ஏ. நிறுவனத்தால் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை புனரமைக்கப்பட்டு நேற்று புதன்கிழமை (12.02.2025) திறந்து வைக்கப்பட்ட போதே இதனை தெரிவித்தார்.
மேலும் அங்கு அவர் தெரிவிக்கையில்..
தெல்லிப்பழையில் அமைந்துள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கான தேவைப்பாடுகள் அதிகம் உள்ள நிலையில் அது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் , சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தனவுடன் இன்று காலை உரையாடும்போது எமக்கு ஏற்பட்டுள்ள ஆளணி வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கையை முன்வைத்திருந்தேன். விரைவில் அதனை மேற்கொள்வதாக எமக்கு சாதகமான பதிலை தந்துள்ளார்.எனவே அதைச் செயற்படுத்துவதன் ஊடாக எமது மாகாணத்தின் சுகாதார சேவைகளை மேம்படுத்தக் கூடியதாக இருக்கும், என்று ஆளுநர் குறிப்பிட்டார்.
மேலும் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னாரில் 9 சிகிச்சை நிலையங்கள் புனரமைப்புக்காக உள்வாங்கப்பட்டு அவற்றில் 8 நிலையங்களின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவற்றுக்கான சான்றிதழ்களும் இந்த நிகழ்வில் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இஷோமார்ரா அகியோ, யு.என்.எப்.பி.ஏ. நிறுவனத்தின் இலங்கைக்கான குழுத் தலைவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன, வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலர் திருமதி ப.ஜெயராணி, வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரன ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
Post a Comment